சென்னை: 2004ஆம் ஆண்டு டிச.26ஆம் தேதி இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு அருகே கடலுக்கடியில் 9.1 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஆழிப் பேரலைகள் (சுனாமி) உருவாகி இந்தியா, இலங்கை, இந்தோனேசியா உள்பட பல நாடுகளின் கடலோரப் பகுதிகளை தாக்கியதில், சுமாா் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். மேலும், ஆழிப்பேரலையில் அடித்துச் செல்லப்பட்ட பலரது உடல்கள் கிடைக்காமல் அவர்களது குடும்பத்தினர் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகினர்.
இந்த நிலையில், இன்று (டிச.26) சென்னை மெரினா கடற்கரையில் பட்டினப்பாக்கம் மீனவ கிராம மக்கள், பால் குடம் எடுத்து பேரணியாக வந்து, சென்னை மெரினா கடற்கரையில் பால் ஊற்றி மற்றும் மலர்கள் தூவி நினைவேந்தலை அனுசரித்தனர். மேலும், இன்றைய தினத்தில் கடல் தொழிலுக்கு யாரும் செல்லாமல், சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நாள் அஞ்சலி செலுத்தபட்டது.
இதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, குளச்சல், கொட்டில்பாடு, மணக்குடி, ராஜாக்கமங்கலம், அழிக்கால், பிள்ளைத்தோப்பு போன்ற மீனவ கிராமங்களிலும், நாகை, புதுவை, கடலூர், வேளாங்கண்ணி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க: பெயர்ப் பலகைகளில் தமிழ் இல்லாத கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்!