சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ரஷ்யா அதிபர் புதின் உத்தரவின் பேரில் 24.02.2022 அன்று உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படித்து வந்த சூழ்நிலையில் இந்தப் போரானது அவர்களை மீட்க மிகுந்த சிரமத்திற்கு உள்ளானது. மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி பயில உக்ரைனுக்குச் சென்ற மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ் மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களை மீட்கும் நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள 24.02.2022 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
மாநில அளவில் கட்டுப்பாட்டு அறை
மாநில அளவில் 24.02.2022 அன்றே கட்டுப்பாட்டு அறை உருவாக்க அரசுச் செயலாளர், பொது மற்றும் மறுவாழ்வுத் துறையிக்கு ஆணை வழங்கப்பட்டது. சென்னையில் 24X7 மணி நேரம் இயங்கக்கூடிய அவசரக் கட்டுப்பாட்டு அறையும், 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணும், 9940256444, 9600023645 ஆகிய உதவி எண்களும் அறிவிக்கப்பட்டது. மேலும் nrtchennai@gmail.com, nrtamils@tn.gov.in ஆகிய மின்னஞ்சல் முகவரிகளும் அறிவிக்கப்பட்டது.
காணொலி மூலம் உரை
முதலமைச்சர் ஸ்டாலின் 26.02.2022 அன்று கட்டுப்பாட்டு அறைக்கு சென்று காணொலி அழைப்பு வாயிலாக உக்ரைனில் மருத்துவம் பயிலும் 3 மாணவர்களுடன் தொடர்பு கொண்டு உரையாடி அவர்களுக்கு தைரியத்தையும் அறிவுரைகளையும் அளித்தார்.
1,921 நபர்கள் 3,501 தொலைபேசி அழைப்புகள் மூலமும், 4,426 மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொண்டு உக்ரைன் தமிழ் மாணவர்கள் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள அவர்களின் பெற்றோர்களிடம் விவரம் பெறப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க ஒன்றிய வெளியுறவு துறையிடம் பகிரப்பட்டது.
முதலமைச்சர் மீண்டும் கடிதம்
உக்ரைனில் இருந்து தமிழ் மாணவர்களின் மீட்பு நடவடிக்கை தாமதமான காரணத்தினால் மீண்டும் முதலமைச்சர் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு 28.02.2022 அன்று தொலைபேசி வாயிலாகவும், பின்னர் 03.03.2022 அன்று கடிதம் மூலமாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
ஐஏஎஸ் அலுவலர்கள் தலைமையில் குழு
நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, ஆட்சியர்கள் அஜய்யாதவ், எம்.கோவிந்தராவ், எம்.பிரதீப்குமார் மற்றும் எ.கே.கமல்கிஷோர் ஆகியோரை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் சென்று தமிழ் மாணவர்களை மீட்கும் பணி செய்ய அனுமதி கோரப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இக்குழுவானது ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை 05.03.2022 அன்று புது டில்லியில் சந்தித்து உக்ரைனிலிருந்து தமிழ்நாடு மாணவர்களை மீட்கும் பணியினை விரைவுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதுடன் தமிழ் மாணவர்கள் அங்கு சந்திக்கும் இடர்பாடுகள் தொடர்பாகவும் விளக்கி கூறப்பட்டது.
பயண செலவை ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு அரசு
35 மாணவர்கள் உக்ரைன் நாட்டின் சில பகுதிகளிலிருந்து அருகாமையிலுள்ள ஹங்கேரி நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட செலவு மற்றும் சுமார் 160 மாணவர்களுக்கு உக்ரைன்-ரூமேனியா நாட்டின் எல்லைக்கு செல்வதற்கும் அங்கிருந்து ரூமேனியா நாட்டின் தலைநகரமான புகாரெஸ்டிற்கு செல்வதற்கான செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டது.
மூன்று சிறப்பு விமானங்கள்
தமிழ்நாடு மாணவர்கள் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டதுடன், தமிழ்நாடு அழைத்துவரப்பட்டதும் துரிதப்படுத்தப்பட்டது. பிரத்யேகமாக மூன்று சிறப்பு விமானங்களும் தமிழ்நாடு அரசால் ஏற்பாடு செய்யப்பட்டது.
ரூ.3.50 கோடி நிதி
உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்த தமிழர்களை பத்திரமாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வர தமிழ்நாடு அரசால் ரூ.3.50 கோடி நிதி உடனடியாக ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 12) சென்னை விமான நிலையத்தில், உக்ரைனில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 9 மருத்துவ மாணவ, மாணவியர்களை பூங்கொத்து வழங்கி வரவேற்றார். தமிழ்நாடு அரசின் சீரிய நடவடிக்கை காரணமாக உக்ரைனில் மருத்துவக்கல்வி பயின்று வந்த 1,921 மாணவர்களில் இதுவரை 1,890 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாணவர்களை மீட்க கட்டுப்பாட்டு அறைகளை உருவாக்கிய முதல் மாநிலம் தமிழ்நாடுதான் - திருச்சி சிவா