கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடந்த மார்ச் மாதம் முதல் முடக்கப்பட்டது. வைரஸ் தொற்று குறைந்த பின்னர் படிப்படியாக பொது முடக்கத்தில் அரசு தளர்வு அளித்துவந்தது.
கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கு தேவையான மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டிய மத்திய அரசு, முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு கரோனா தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டின் அடிப்படையில் அனுமதி வழங்கியது.
முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி உட்செலுத்திக்கொள்ள விருப்பம் தெரிவித்து கோவின் என்ற செயலியில் சுமார் 5 லட்சம் மருத்துவத் துறை சார்ந்த பணியாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு முதல்கட்டமாக 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 கோவிஷீல்ட் தடுப்பூசிகளும், 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகளும் வந்துள்ளன. இந்த தடுப்பூசிகளை போடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் மேற்கொண்டுள்ளது.
ஜனவரி 16ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் 160 மையங்களில் மருத்துவத் துறை சார்ந்த பணியாளர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசிகள் போடப்பட்டுவருகின்றன.
கோவிஷீல்ட் தடுப்பூசி (மாநிலம் முழுவதும்):
ஜனவரி 16ஆம் தேதி: 3,027 நபர்களுக்கும்
ஜனவரி 17ஆம் தேதி: 2,897 நபர்களுக்கும்
ஜனவரி 18ஆம் தேதி: 10,005 நபர்களுக்கும் என மொத்தம் இதுவரை 15 ஆயிரத்து 975 நபர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழ்நாட்டில் 6 மையங்களில் கோவாக்சின் தடுப்பூசி போடப்படுகிறது.
கோவாக்சின் தடுப்பூசி
ஜனவரி 16ஆம் தேதி: 166 நபர்களுக்கும்
ஜனவரி 17ஆம் தேதி: 164 நபர்களுக்கும்
ஜனவரி 18ஆம் தேதி:177 நபர்களுக்கும் என 507 பேருக்கு போடப்பட்டுள்ளது.
இதுவரை தமிழ்நாட்டில் பதிவு செய்த சுமார் 5 லட்சம் மருத்துவத்துறை பணியாளர்களில் 16 ஆயிரத்து 462 பேருக்கு தடுப்பூசி உட்செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசியின் முழுமையான பரிசோதனை முடிவுகள் வெளிவராததால் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்கள் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர் எனக் கூறப்படுகிறது.