சென்னை சிந்தாதிரிப்பேட்டை படவேட்டம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன் (35). இவர் பெயிண்டர் வேலை செய்துவருகிறார். நேற்று இரவு 8.30 மணியளவில் வீட்டிலிருந்து போன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பட்டாக்கத்தியுடன் தமிழரசன் வீட்டிற்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டத் தொடங்கினர்.
தன்னை காத்துக்கொள்ள ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த தமிழரசனை தடுத்துநிறுத்தி மீண்டும் சாலையின் நடுவே வைத்து வெட்டியுள்ளது அந்தக் கும்பல். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவருவதைக் கண்ட கொலைவெறிக் கும்பல் அங்கிருந்து தப்பிவிட்டது.
பின்னர், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தமிழரசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த சிந்தாதிரிப்பேட்டை காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பாக இப்பகுதியில் உள்ள சசி என்பவரின் கொலையில் தற்போது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட தமிழரசன் ஏ2 குற்றவாளியாக சிறைத் தண்டனை பெற்றவர்.
பழிக்குப்பழியாக இந்தச் சம்பவம் நடந்திருக்குமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்கின்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: முன்விரோதம்: டாஸ்மாக்கில் இரட்டைக் கொலை... பெரம்பலூரில் போலீஸ் குவிப்பு!