தமிழ்நாடு ரயில் நிலையங்கள், ரயில் நிலைய வளாகங்கள், சுற்றித்திரியும் ஆதரவற்றோா், பிச்சை எடுப்பவா்களை மீட்டு, மறுவாழ்வு அளிக்க காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.
அதன்படி ரயில்வே காவல்துறை அலுவலர்கள் கண்காணிப்பில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருச்சி ரயில்வே காவல் மாவட்டங்களில் உள்ள எல்லா ரயில் நிலையங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில், ஆதரவற்று சுற்றித்திரிந்த 136 பேர், 16 பெண்கள் என்று மொத்தம் 152 போ் மீட்கப்பட்டனர்.
அவா்களுக்கு முடிவெட்டி, முகச்சவரம் செய்து, புத்தாடை அணிவித்து உணவு வழங்கி தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் அருகாமையில் உள்ள பாதுகாப்பு மையங்களில் ஒப்படைத்தனர். இதில் இருவர் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதேபோல் கடந்த ஆண்டு மேற்கொண்ட தணிக்கையில் 152 ஆதரவற்ற ஆண்கள், 5 பெண்கள் மற்றும் 9 மனநலம் பாதிக்கப்பட்டோர் என மொத்தம் 166 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பு இல்லங்களில் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும் ரயில்வே பயணிகள் தங்களது பாதுகாப்பு தொடர்பான புகார்களை 24 மணி நேரமும் 9962500500 என்ற எண்ணில் வாட்ஸ்அப் தகவல்களாகவும் தெரிவிக்கலாம். மேலும், இலவச அழைப்பாக 1512 என்ற எண்ணிலும் புகார்களைத் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : காவல் துறையினரைத் தகாத வார்த்தைகளில் பேசிய மூன்று பேர் கைது