சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இன்று(ஜூலை 21), கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான விண்ணப்பப் படிவம் பெறுவது குறித்து தன்னார்வலர்களுக்கு முன்னோட்டப் பயிற்சி வழங்கப்பட்டது. இதனை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்களை பெற நடைபெற உள்ள முகாம் தொடர்பான பணிகளை பார்வையிட்டோம். பணிகள் திருப்திகரமாக உள்ளது. மதியம் அனைத்து முகாம்களிலும் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதன் முடிவின் அடிப்படையில் ஏதாவது மாற்றங்கள் தேவைப்பட்டால் மேற்கொள்ளப்படும். 703 ரேஷன் கடைகள் உள்ளன. கடைகளுக்கு ஏற்றபடி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
1,700 தன்னார்வலர்களுக்கு இது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 703 ரேஷன் கடைகள் மூலம் இதுவரை 15 விழுக்காடு டோக்கன் மற்றும் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட கண்காணிப்பு குழுவினர் குறிப்பிட்ட நியாய விலை கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர். வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு முகாம்களில் வங்கிக் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2,300 பயோ மெட்ரிக் கருவிகள் தயார் நிலையில் உள்ளன. கூடுதலாக தேவையான பயோ மெட்ரிக் கருவிகளும் தயார் நிலையில் உள்ளன. இந்த உரிமைத் தொகை திட்டத்திற்கு பதிவு செய்ய சென்னை நகரில் இரண்டு கட்டங்களாக முகாம் நடத்தப்படும். சென்னை மாநகராட்சி ஏற்கனவே அறிவித்தபடி முதற்கட்ட விண்ணப்பதிவு முகாம் ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெறும்" என்று கூறினார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, இத்திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த தினத்தில் தொடங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தார். இத்திட்டத்தில் ஒரு கோடி பயனாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும், இதற்காக 2023-24ஆம் ஆண்டில் 7,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, பயனாளிகளின் தகுதிகள், நிபந்தனைகள் வெளியிடப்பட்டு, நியாய விலைக்கடைகள் மூலம் விண்ணப்பம், டோக்கன் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, விண்ணப்பம், டோக்கன் விநியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது.
இதையும் படிங்க: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: சென்னையில் டோக்கன் விநியோகம் தொடக்கம்!