நாடு முழுவதும் கரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக கரோனா தடுப்பு மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. சிலர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி கரோனா தடுப்பு மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்று லாபம் சம்பாதித்து வருகின்றனர். ஐம்பது விழுக்காட்டிற்கும் மேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவர்கள் ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வண்டலூர் பகுதியில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்கப்படுவதாக தனிப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தனிப்படையினர் மருந்தகத்தில் பணிபுரியும் விஷ்ணுகுமாரை கைது செய்தனர். இவரிடமிருந்து 7 ரெம்டெசிவிர் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் அளித்த தகவலின் அடிப்படையில் கோவில்பட்டியை சேர்ந்த சண்முகம் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெங்களூரில் உள்ள மொத்த வியாபார கடையில் ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி ரூ. 3 ஆயிரத்துக்கு விஷ்ணுவிடம் விற்றதும், விஷ்ணு அதனை ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்ததும் தெரியவந்தது. சண்முகம் அளித்த தகவலின் அடிப்படையில் நெல்லை, மதுரை ஆகிய இடங்களில் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் விஷ்ணு பல பேரிடம் கள்ளத்தனமாக ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி விற்பனையில் ஈடுபட்டது அம்பலமானது.
விஷ்ணு அளித்த தகவலின் பேரில் பாரிமுனையில் மருந்து கடை வைத்துள்ள புவனேஷ், நித்திஷ் என மேலும் இருவர் தனிப்படை காவலர்களால் இன்று (மே.14) கைது செய்யப்பட்டனர். இவர்கள் பங்களாதேஷ் நாட்டில் ரெம்டெசிவிர் மருந்தை மொத்தமாக ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர்.
பின்னர் ஆந்திரா வழியாக கள்ளத்தனமாக ரெம்டெசிவிரை சென்னைக்கு எடுத்து வந்துள்ளனர். அதனை விஷ்ணு மூலமாக ரூ. 23 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 145 ரெம்டெசிவிர் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை இந்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். வேறு யாருக்கெல்லாம் இதில் தொடர்புண்டு எனவும் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : தொழில்நுட்ப கோளாறு: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுத்தம்!