சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (செப்.28) காலையிலிருந்து மதியம் வரையில் வெயில் கொளுத்தியது. ஆனால் பிற்பகல் 3.30 மணியில் இருந்து திடீரென கரும் மேகங்கள் சூழ்ந்து கொண்டு, இடி, மின்னலுடன் கனமழை பெய்ய தொடங்கியது.
இந்த திடீா் மழையின் காரணமாக பெங்களூரிலிருந்து சென்னைக்கு 74 பயணிகளுடன் மாலை 3.20 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.20 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்த தனியார் பயணிகள் விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் மீண்டும் பெங்களூருக்கே திரும்பிச் சென்றது.
சென்னையில் தற்போது மழை ஓய்ந்துவிட்டதால், மீண்டும் சென்னைக்குத் திரும்பி வரவிருப்பதாக விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானங்கள் தரையிரங்காமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து பறந்து கொண்டிருந்தன.
திருச்சி, புனே, கொல்கத்தா, டெல்லி, மதுரை, பெங்களூர் ஆகிய நகர்களிலிருந்து சென்னைக்கு வந்த ஆறு விமானங்கள் தரையிறங்காமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து பறந்து கொண்டிருந்தன. அதன்பின்பு மழை ஓய்ந்ததும் இந்த விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்னையில் தரையிறங்கின.
அதேபோல், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விசாகப்பட்டினம், கவுகாத்தி, கொல்கத்தா, கோவை, டெல்லி, மதுரை மற்றும் சர்வதேச விமானமான இலங்கை ஆகிய 7 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. இந்த திடீர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று மாலை மொத்தம் 13 வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் தாமதமாகின.
இதையும் படிங்க: பாடலாசிரியர் சினேகன் மீது பாஜகவைச் சேர்ந்த நடிகை காவல்துறையில் புகார்...!