சென்னை: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே உயர்கல்வி மாணவர் சேர்க்கையை நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் முடிக்க வேண்டாம் என அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் பல்கலைக்கழக மானியக்குழு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாத காலம் தாமதம் ஆகும் என்கிற தகவலை தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான 2ஆம் பருவத் தேர்வு, ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி ஜூன் 15ஆம் தேதி வரையிலும், சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி மே 24ஆம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடித்த மாணவர்கள் தற்போது உயர்கல்வி சேர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் வெளியாவதற்கு முன்பாகவே உயர்கல்வி மாணவர் சேர்க்கையை முடித்திட வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையில் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாத காலம் ஆகும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. இதனால் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்டுள்ள தொடர் கால தாமதம் காரணமாக கலக்கமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்த ஆர்டிஐக்கு ஆளுநர் செயலகம் அளித்த அதிர்ச்சி பதில்!