சென்னை: தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்கள், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்தது. அதன்படி, மாணவர்கள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்திருந்தனர்.
இந்த நிலையில் அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா இன்று (மே.29) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்கள், விடைத்தாள் நகலை மே 30ஆம் தேதி மதியம் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து, விண்ணப்பித்த படங்களுக்குரிய விடைத்தாள் நகலை பெற்றுக் கொள்ளலாம்.
விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு அரசு தேர்வு துறையின் இணையதளத்தில் இருந்து விண்ணப்பித்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இரண்டு நகல்கள் எடுத்து மே 31ஆம் தேதி மதியம் முதல் ஜூன் 3ஆம் தேதி மாலை 5 மணி வரை சம்மந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கான கட்டணத்தை மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும்.
புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்களை ஒப்படைத்து, அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்:
கடந்த 8ஆம் தேதி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் தமிழ்நாட்டில் 94.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8லட்சத்து 3ஆயிரத்து 385 மாணவர்களில் 7லட்சத்து 55ஆயிரத்து 451 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றிருந்தனர். மாணவிகள் கூடுதாக 4.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
பாடவாரியாக இயற்பியல் பாடத்தில் 97.76 சதவீதம் மாணவர்களும், வேதியியலில் 98.31 சதவீதம் மாணவர்களும், உயிரியல் பாடத்தில் 98.47 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல், கணிதத்தில் 98.8 சதவீதம், தாவரவியலில் 98.04 சதவீதம், விலங்கியல் பாடத்தில் 97.77 சதவீதம், கணினி அறிவியல் பாடத்தில் 99.29 சதவீதம், வணிகவியலில் 96.41 சதவீதம், கணக்குப்பதிவியலில் 96.06 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: "நேவிகேஷன் தான் இனி டாப்" - இஸ்ரோ விஞ்ஞானியின் சூப்பர் தகவல்