சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான, 2022-23ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்த நிலையில், இறுதியாக நாளை வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல் பாடங்களுக்கான தேர்வு, ஏப்ரல் 3ஆம் தேதியுடன் நடைபெற்று முடிகிறது.
இந்தத் தேர்வினை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் எழுதுகின்றனர். இவர்களில் தமிழ்நாட்டு பள்ளிகளில் இருந்து 4 லட்சத்து 3 ஆயிரத்து 156 மாணவர்கள், 4 லட்சத்து 33 ஆயிரத்து 436 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 பேர் எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டு, 3185 மையங்களில் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி பள்ளிகளில் படித்த 6 ஆயிரத்து 982 மாணவர்கள், 7728 மாணவிகள் என 14 ஆயிரத்து 710 பேர் 40 தேர்வு மையங்களில் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தனித் தேர்வர்களாக 14 ஆயிரத்து 966 மாணவர்கள் எழுத 134 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கேள்வித்தாள் வைக்கப்பட்டுள்ள இடங்களில், 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலர் பணியில் உள்ளனர். மேலும், சிசிடிவி கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம், கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தேர்வு மையமாக செயல்படக்கூடிய பள்ளிகளில் காலையில் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. இந்த நிலையில், தேர்வு முடிந்த பின்னர் மாணவர்களின் விடைத்தாள் திருத்துவதற்காக மண்டலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அங்கிருந்து விடைத்தாள் திருத்தும் மையமாக அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு 7ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஏப்ரல் 10ஆம் தேதி விடைத்தாளை அனுபவம் வாய்ந்த முதன்மைத் தேர்வாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள, முதுகலை ஆசிரியர்கள் திருத்தும் பணியை துவங்குகின்றனர். அதனைத் தொடர்ந்து, 11ஆம் தேதி முதல் முதுகலை ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். விடைத்தாள் அனைத்தும் ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் திருத்தி முடிக்கப்பட்டு, மே மாதம் 5ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
இதையும் படிங்க: ஏப்ரல் 4ல் மது மற்றும் இறைச்சிக்கடைகள் இயங்காது - எந்த மாவட்டத்தில் தெரியுமா?