சென்னை: 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் வரும் அக்.14ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை நடைபெற்றது. மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடுவது தள்ளிப்போனது.
அதனைத் தொடர்ந்து 11,12ஆம் வகுப்பில் அரியர் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்காக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டன. தற்பொழுது மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் தேதியை அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 11ஆம் வகுப்பு மாணவர்களில் அரியர் தேர்வர்கள், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல் (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உள்பட) வருகின்ற அக்.14ஆம் தேதி முதல் வழங்கப்படும்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களையும், மதிப்பெண் பட்டியலினையும் பெற்றுக்கொள்ளலாம்.
புதிய நடைமுறையில் 600 மதிப்பெண்கள்
11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும், 11ஆம் வகுப்பில் 600 மதிப்பெண்கள் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான 600 மதிப்பெண்கள் என மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியே வழங்கப்படும்.
மதிப்பெண் பட்டியல்
11 அல்லது 12ஆம் வகுப்பு பொதுத் தேர்விலோ அல்லது இரண்டு பொதுத் தேர்வுகளிலுமோ முழுமையாக தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு, அவர்கள் இரு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களை பதிவுசெய்து அச்சிடப்பட்ட ஒரே மதிப்பெண் பட்டியலாக வழங்கப்படும். இந்த மாணவர்கள் 11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பின்னரே, அவர்களுக்கு தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
பழைய நடைமுறையில் 1200 மதிப்பெண்கள்
பழைய நடைமுறையில் 1200 மதிப்பெண்கள் நிரந்தர பதிவெண் கொண்டு தேர்வெழுதிய 12ஆம் வகுப்பு தேர்வர்கள், இதற்கு முந்தைய பருவங்களில் தேர்ச்சி பெறாத பாடங்களை, மார்ச் 2020 பொதுத் தேர்வில் எழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பின், அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்களும், முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
நிரந்தர பதிவெண் இல்லாமல் (மார்ச் 2016 பொதுத் தேர்விற்கு முன்னர்) 12ஆம் வகுப்பு தேர்வெழுதிய தேர்வர்கள், தற்போது மார்ச் 2020 பொதுத் தேர்வெழுதி இருந்தால், அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். மதிப்பெண் சான்றிதழ்களை, மதிப்பெண் பட்டியல்களைப் பெற்றுக் கொள்ள பள்ளி, தேர்வு மையத்திற்கு வருகை தரும் மாணவர்கள், பெற்றோர் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தகுந்த இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்றுதல் வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: முதுநிலை பட்டப்படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!