கரோனா தொற்று காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மேலும் மாணவர்கள் ஏற்கனவே பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண்கள் தயாரிக்கப்பட்டன.
மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு ஜூலை 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் மாணவர்களுக்கான மதிப்பெண்களில் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பினால் 12ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”2020-21 கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. அரசு உத்தரவின்படி இந்தத் தேர்வு முடிவுகளில் மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பினால் பன்னிரண்டாம் வகுப்பு எழுத்துத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் தேர்வு முடிவுகளில் மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்கள் ஜூலை 23ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை(ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
12ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்கள் எழுத்துத் தேர்விற்கு விண்ணப்பிக்கும்போது கட்டாயம் தங்களுக்கு உரிய அனைத்து பாட தேர்வையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அச்சிறுவர்கள் குறிப்பிட்ட பாட தேர்வுகளை மட்டும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க இயலாது.
இறுதி மதிப்பெண்
தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் குறைவாக உள்ளதாகக் கருதி எழுத்துத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு, தற்போது எழுத உள்ள தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியானது. 2021 மே மாதம் 12ஆம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் துணைத் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம்.
மேலும் 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதிவரை விண்ணப்பிக்க தவறியவர்கள், 28ஆம் தேதி தேதி சேவை மையங்களில் சிறப்பு திட்டத்தின் மூலம் கூடுதலாக ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தெரிந்துகொள்ளலாம்.
அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகங்களிலும் தெரிந்துகொள்ள முடியும். 2021 துணைத் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டிய சேவை மையங்களுக்கு வரும் தேர்வர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
12ஆம் வகுப்பு தேர்வு கால அட்டவணை
துணைத் தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1 .15 மணிவரை நடைபெறும். காலை 10 மணி முதல் 10:10வரை மாணவர்கள் வினாத்தாளை படிப்பதற்கு நேரம் அளிக்கப்படும். காலை 10:10லிருந்து 10:15வரை விடைத்தாள்களை சரிபார்த்து பூர்த்தி செய்ய நேரம் அளிக்கப்படும். காலை 10:15 முதல் பிற்பகல் 1.15வரை எழுத்து தேர்வு நடைபெறும்.
ஆகஸ்ட் 6 - மொழித்தாள்
ஆகஸ்ட் 9 -ஆங்கிலம்
ஆகஸ்ட் 11- இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்
ஆகஸ்ட் 13 - வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
ஆகஸ்ட் 16 - கணக்கு விலங்கியல் வணிகவியல், நுண்ணுயிரியல், உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல், துணிநூல் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, விவசாய அறிவியல், நர்சிங் பொது, நர்சிங் தொழிற்கல்வி.
ஆகஸ்ட் 18 - தாவரவியல், உயிரியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடி
ஆகஸ்ட் 19 - தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம் மற்றும் கோட்பாடுகள், கம்ப்யூட்டர் அறிவியல், கம்ப்யூட்டர் பயன்பாடுகள், உயிர் வேதியியல், சிறப்பு தமிழ், மனை அறிவியல் ,அரசியல் அறிவியல் புள்ளியியல்” என குறிப்பிடப்ட்டுள்ளது.