கரோனா தாெற்று 2ஆவது அலை வேகமாக பரவி வருவதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக படுக்கை வசதிகளை அதிகரிப்பதுடன், மருத்துவப் பணியாளர்களையும் நியமிக்க வேண்டி உள்ளது. வரும் காலத்தில் செவிலியர்களின் தேவை சென்னையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2015- 2016ஆம் ஆண்டு எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவு செய்திருந்த ஒப்பந்த செவிலியர்கள் 1,212 பேருக்கும் பணி நிரந்தரம் செய்யப்படுவதாக தமிழ்நாடு சுதாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றி வந்த 1,212 செவிலியர்களின் ஒப்பந்தம் வரும் 5ஆம் தேதியுடன் நிறைவு பெறவிருந்த நிலையில், அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
நிரந்தரப் பணியாளர்களாக மாற்றப்பட்டுள்ள செவிலியர்கள், மே 10ஆம் தேதிக்கு முன் சென்னைக்கு பணி உத்தரவுடன் வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது கரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால், இவர்களை கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை ரூ.15 ஆயிரத்தை ஊதியமாகப் பெற்று வந்த செவிலியர்களுக்கு, இனி ரூ.40 ஆயிரம் ஊதியம் கிடைக்கும். ஒப்பந்தப் பணியாளர்களாக இருந்த தங்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றிய தமிழ்நாடு அரசுக்கு செவிலியர்கள் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவில் 2 கோடியை தாண்டிய கரோனா பாதிப்பு