கரோனா நோய்த்தொற்று பாதிப்பைக் கருத்தில்கொண்டு 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்துசெய்யப்படுவதாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் 12ஆம் பொதுத்தேர்வு நடத்தப்படுமா, நடத்தப்படாதா என்ற எதிர்பார்ப்பு நீடித்துவந்தது.
இந்நிலையில், நேற்று (ஜூன் 2) காலை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், "ஏற்கனவே ஒன்றிய அரசுடன் நடைபெற்ற ஆலோசனையில் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களும் கோரிக்கைவிடுத்தன.
தமிழ்நாடும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.
இந்நிலையில், நேற்று (ஜூன் 1) பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை ரத்துசெய்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதனால், தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்துப் பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்களிடம் இரண்டு நாள்களில் கருத்துகளைப் பெற்று, அதன்பின்னர் தேர்வு குறித்து முடிவுசெய்யப்படும்” எனக் கூறினார்.
அதனையடுத்து, இன்று அனைத்துத் தரப்பினரும் கருத்துகள் தெரிவிக்க tnschoolerdu21@gmai.com என்ற மின்னஞ்சல் முகவரியும்; சந்தேகங்கள் குறித்து விசாரிக்க 14417 என்ற இலவச உதவி அலைபேசி எண்ணையும் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
மேலும் தலைமை ஆசிரியர்கள் மூலமாகப் பள்ளி சார்ந்த மாணவர்கள், பெற்றோரின் கருத்துகளைக் கேட்டறிந்து அதன் விவரத்தைத் தொகுத்து முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அளித்திடத் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களைப் பள்ளிக் கல்வித் துறை வலியுறுத்தியுள்ளது.