சென்னை: கரோனாவால் பள்ளி மாணவர்கள் 11% பேர் இடைநிற்றலுக்கு ஆளாகியுள்ளனர். மீண்டும் பள்ளிகள் திறந்தாலும் 5% மாணவர்கள் பள்ளி செல்ல விருப்பம் தெரிவிக்கவில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.
இந்த இயக்கத்தின் மாநிலச் தலைவர் தினகரன், முன்னாள் மாநில தலைவர் மணி, பொதுச் செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர், அப்போது, " தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 38 மாவட்டங்களிலும் 202 தன்னார்வலர்கள் மூலம் 2137 மாணவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு
இந்த ஆய்வில் 2019- 20 கல்வி ஆண்டு முதல் 2020-21 வரை உள்ள காலத்தில் அரசு பள்ளிகளில் ஐந்து விழுக்காடு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் தனியார் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏழு விழுக்காடு குறைந்துள்ளது.
பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் உயர் வகுப்புக்கு செல்லாமல் 11 விழுக்காடினர் இடை நிற்றலில் உள்ளனர். பள்ளி திறந்த பின்பு இந்த இடைநிற்றல் விகிதம் குறைய வாய்ப்புள்ளது.
ஆன்லைன் வகுப்புகளில் 49 விழுக்காடு மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களிலும் 54 விழுக்காடு மாணவர்கள் இணையதள வசதி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி தொலைக்காட்சியை மட்டுமே நம்பி 41 விழுக்காடு மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இதில் கல்வி தொலைக்காட்சி நடத்தும் பாடங்கள் 44 விழுக்காடு மாணவர்களுக்கு புரிவதாக கூறுகின்றனர்.
95% பள்ளி செல்ல விருப்பம்
மேலும் பெருந்துறையில் பகுதியில் உள்ள 82% மாணவர்கள் பள்ளி செல்லாமல் இருப்பது வருத்தமளிப்பதாக கூறியிள்ளனர். பள்ளி செல்வதற்கு 95% மாணவர்கள் தயாராக உள்ளனர்.
5% மாணவர்கள் பள்ளி செல்ல விருப்பம் இல்லை என தெரிவிக்கின்றனர். இதற்கு காரணம் மெல்ல கற்கும் மாணவர்கள். அவர்கள் தற்போது பள்ளிக்குச் செல்லாமல் வேலைக்கு செல்கின்றனர். இவர்கள் மீண்டும் பள்ளி செல்வதற்கு சிரமமாக கருதுகின்றனர்.
குழந்தை தொழிலாளர்கள்
பள்ளி செல்வதே மகிழ்ச்சி என 77% மாணவர்கள் தெரிவிக்கின்றனர். கரோனா காரணமாக 14 வயதுக்கு கீழே உள்ள 13% மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர்.
பள்ளிகள் திறக்கும் போது குழந்தை தொழிலாளியாக இருக்கும் மாணவர்கள், இடைநின்ற மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் பள்ளி செல்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
கரோனா பரவாத கிராமங்கள் மற்றும் ஒன்றியங்களில் பள்ளிகளை பகுதியாக திறப்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி ஆசிரியர்களுக்கு தடுப்புசி வழங்குவதில் முன்னுரிமை அளித்து பள்ளி திறப்பு மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை அரசு உறுதி செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஜூலையில் பள்ளிகள் திறப்பு?