கரோனா ஊரடங்கினால் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. நடப்பு கல்வியாண்டில் நவம்பர் 16ஆம் தேதிமுதல், 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதும், கருத்துக் கேட்பின் அடிப்படையில் பள்ளி திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கினால் பள்ளிக் கல்வித்துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள், பாடத்திட்ட குறைப்பு, வேலை நாள் குறைப்பு, மாணவர்களுக்கான பாடங்களை நடத்துவது ஆகியவை குறித்து முடிவெடுக்க அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவினர் ஆகஸ்ட் மாதம் அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்தனர். அதில் 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடத்தலாம் என கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மே மாதம் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்பதால் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேர்தலுக்குப் பின்பு நடத்தப்பட வாய்ப்புள்ளது.
மாணவர்களுக்கு ஆண்டு தோறும் 200 பள்ளி வேலை நாட்கள்தான் நடக்கின்றன. ஆனால், இந்தாண்டு ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை ஞாயிற்றுக்கிழமை தவிர பிற நாள்களில் விடுமுறை அல்லாமல் நடத்தினால் பாடங்களை ஆசிரியர்கள் முடிக்க முடியும் எனவும் அரசுக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பது குறித்து அவசரம் வேண்டாம் - பொதுப்பள்ளிக்கான மாநில மேடை கருத்து!