சென்னை: தமிழக கடலோர காவல் படையின் சார்பாக கடந்த 10ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு பெண்களுக்கான படகு சவாரி நிகழ்வைத் துவங்கி வைத்தனர். சென்னையில் இருந்து 1000 கிலோ மீட்டர் தூரம் தரங்கம்பாடி வரை சென்று நேற்று சென்னை திரும்பிய அவர்களை டிஜிபி சைலேந்திரபாபு சென்னை துறைமுகத்தில் வரவேற்று வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அவர்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கிய டிஜிபி, அவர்களுடன் குழு படங்கள் எடுத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு, “தமிழ்நாடு காவல்துறை மகளிர் காவல்துறையினர் 50 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கக் கூடிய நிலையில் சென்னையில் இருந்து தரங்கம்பாடி வரை கடலில் இருந்து ஆயிரம் கிலோமீட்டர் சென்று விட்டு வந்திருக்கிறார்கள்.
24 மகளிர் காவலர்கள் உயர் அதிகாரிகள் இது உலக அளவில் எந்த காவல் துறையும் செய்யாத ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள். இதற்காக இவர்களுக்கு தேசிய அளவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க பயிற்சிகள் அளிக்கப்பட்டு பரிசுகளை கோப்பைகளை வெல்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே கடத்தல், தீவிரவாதம் போன்றவற்றை கடலோர காவல்படை நடத்தி வருகிறது.
30 காவல் நிலையங்கள், 24 படகுகள், 100 சோதனைச் சாவடிகள் உள்ளன. படகு சவாரி செய்வதற்கும், எதிரிகளைப் பிடிப்பதற்கும் போர் புரிய வேண்டும். இது ஆபத்தான ஒரு விளையாட்டு. திடீரென்று கடல் கொந்தளிப்பு, சீற்றங்கள், புயல் போன்றவை நிகழும். படகு கவிழும்போது படகில் ஒரு மணி முதல் 5 மணி வரை கடலில் தத்தளிப்பது போன்ற ஆபத்துகள் எல்லாம் இந்த படகு சவாரியில் உள்ளது. இதன் மூலம் தன்னம்பிக்கை வரும். ஒரு புத்துணர்ச்சி மற்றும் தைரியம் வரும்.
பெண் காவலர்கள் என்றாலே பெண் குற்றவாளிகளுக்கு காவலுக்கு வைப்பது அவர்களை அழைத்துச் சென்று வருவதற்கும் இது போன்ற பணிகளைத் தான் பாதுகாத்து வந்தனர். ஆனால், தற்போது மிகப்பெரிய பணிகளில் பெண்கள் தான் அதிகம் உள்ளனர். காவல் நிலையம் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள இருக்கக்கூடிய பெண்களை எல்லாம் பார்க்கிறோம். 500க்கும் மேற்பட்ட நிலைய அதிகாரிகளே இருக்கிறார்கள்.
முதலமைச்சரின் பாதுகாப்புப் பிரிவில் கூட பெண்கள் இருக்கிறார்கள். பெண்கள் எல்லாத் துறையிலும் ஆண்களுக்கு சரிசமமாக வந்திருக்கிறார்கள். மிகப்பெரிய சாதனை எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும் பெண்கள் பணியாற்ற, காவல்துறை அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும்” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், ’’தஞ்சையில் மது போதையில் சயனைடு கலந்து குடித்து இருவர் உயிர் இழந்த விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறையில் இதே போல சயனைடு கலந்து கொடுத்த விவகாரத்தில் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளாக இதே போல பல வழக்குள் வந்துள்ளன. அதில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து உள்ளோம். குற்றவாளிகளை உடனே கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டும் வருகிறோம்” என்று கூறினார்.
பின், ’’போட்டியில் கலந்து கொண்ட பெண் அதிகாரிகளும் காவலர்களும், கடந்த 10 நாட்களாக குடும்பத்தை விட்டு தனியாக சாதிக்க வேண்டும் என்கிற லட்சியத்திலும், எண்ணத்திலும் சுற்றி கடல் நீர் நிறைந்த, இருள் சூழ்ந்த பகுதிகளிலும் போர் நேரங்களில் எவ்வாறு பணியாற்ற வேண்டுமோ என்கிற எண்ணங்களில் புதுவித அனுபவத்துடன் கடலில் பயணித்து சென்னை திரும்பி உள்ளனர்.
மேலும், காவல்துறை அதிகாரிகள் அளித்த உத்வேகம் மற்றும் பயிற்சியினால் மட்டுமே இது சாத்தியம் அடைந்தது. எங்களால் சாதிக்க முடிந்தது எனத் தெரிவித்தனர். மேலும் கடலூர் தாண்டி நாகப்பட்டினம் செல்லும் பொழுது திடீரென மழை பெய்தது. 5 மணி நேரமாக என்ன செய்வது என்று தெரியாமல் இடி, மின்னலுடன் அருகில் இருப்பவர்கள் யார் என்று கூட பார்க்க முடியாத அளவிற்கு மிகுந்த ஆபத்தான பயணத்தை முதல் முறையாக அனுபவித்ததாகவும், ஆனால் பயத்தை வெளி காட்டிக் கொள்ளாமல் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்கிற எண்ணத்தின் அடிப்படையிலேயே மிக தைரியமாக இந்த சாதனையைப் படைத்திருப்பதாகவும்’’ போட்டியில் பங்கேற்ற காவலர்கள் மிகப் பெருமையுடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்த ஆயத்தம்!