சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து வெளிமாநிலத்திற்குக் கடத்த முயன்ற 1000 கிலோ ரேசன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பொருள்கள் கடத்தலைத் தடுக்க, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவலர்கள் தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து, ஒடிசா மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் எழும்பூர் ரயில் நிலையத்தில் சோதனை செய்தனர்.
ஒடிசாவிற்கு கடத்த முயன்ற அரிசி பறிமுதல்
சோதனையில் 5ஆவது நடைமேடையில் 1000 கிலோ ரேசன் அரிசியைக் கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து ரேசன் அரிசியைப் பறிமுதல் செய்து, ஒடிசாவிற்குக் கடத்த முயன்ற நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மேலும் கடந்த 1ஆம் தேதி முதல் நேற்று (ஜூன்.28) வரை ரேசன் அரிசி கடத்தியதாக 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 30 பேரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அதேபோல் 9,750 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: ஏடிஎம் கொள்ளை: கொள்ளையனை திருடச் சொல்லி வீடியோ எடுத்த காவல்துறை!