சென்னை கொளத்தூர் வெற்றிவேல் நகர் விசி சித்தர் தெருவில் வசித்து வருபவர் அல்லி தாமரை (53). இவர் வேலூர் மாவட்டத்தில் சிறப்பு துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.
இவரது வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை, 8 லட்சம் பணம் மற்றும் 3 கிலோ வெள்ளியை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இவர் ஏப்ரல் 2ஆம் தேதி தேர்தல் பணிக்காக அரக்கோணம், திருப்போரூர் சென்று இருந்த நிலையில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. மறுநாள் வீட்டில் பணிபுரியும் வேலையாட்கள் வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், கொளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கைரேகை நிபுணர்களை வரவழைத்து, ரேகைகளை பதிவு செய்து பழைய குற்றவாளிகள் யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.