சென்னை: ஐஐடி மேலாண்மைத் துறை 100 விழுக்காடு வளாக வேலைவாய்ப்பை மீண்டும் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. பணியமர்த்தும் நிறுவனங்கள் விரிவான பயணம் ஏதுமின்றி மாணவர்களை எளிதில் அணுகவும், அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் பங்கேற்கவும் ஏதுவாக வளாக வேலைவாய்ப்புகள் வீடியோ கான்ஃபெரன்சிங் முறையில் நடத்தப்பட்டன.
இம்முறை வளாக வேலைவாய்ப்பின்போது, ஆண்டு சம்பளத்தில் 30.35 விழுக்காடு (CTC) அளவுக்கு உயர்த்தப்பட்டதால் சராசரியாக 16.66 லட்சம் ரூபாய் பணியில் சேர்பவர்களுக்குக் கிடைக்கும். அமேசான், சிஐஎஸ்கோ, ஐசிஐசிஐ, எம்சிகென்சிய், (MCKinsey) உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை வழங்கி பணியமர்த்தி உள்ளன.
வளாக வேலைவாய்ப்புக்கு பதிவு செய்திருந்த 61 மாணவர்களும் பணிவாய்ப்புகளைப்பெற்று, அவற்றை ஏற்றுக் கொண்டனர். தேர்ந்தெடுக்கும் நிறுவனத்தில் பயிற்சி பெற்று அங்கேயே பணியாற்றும் வகையில் சுமார் 16 விழுக்காடு மாணவர்களுக்கு, பணிக்கு முந்தைய வாய்ப்புகள் (Pre-Placement Offers -PPOs) கிடைத்துள்ளன.
கரோனா நோய்த்தொற்று காலத்திற்குப் பின், மேலாண்மைக் கல்வித்துறை வேலைவாய்ப்புகளில் புதிய போக்குகள் உருவாகி உள்ளன. குறிப்பாக ஆலோசனை மற்றும் பகுப்பாய்வு தொடர்பான பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.
இது குறித்து சென்னை ஐஐடி மேலாண்மைக் கல்வித்துறையின் தலைவர் தேன்மொழி கூறும்போது, “பாடத் திட்டத்தின் தரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தேர்வு செய்யும் நிறுவனங்கள் வழங்கும் கவர்ச்சியான சலுகைகள் அமைந்துள்ளன. ஆசிரியர்கள், கடுமையான பயிற்று முறை, கற்றல் நடைமுறை ஆகியவற்றில் மேலாண்மைக் கல்வித்துறை சிறந்து விளங்குவது அனைவரும் அறிந்த ஒன்றாகும். வருங்காலத்தில் இன்னும் பல்வேறு களங்களில் தொழில் துறையுடனான ஈடுபாட்டை எதிர்பார்க்கிறோம்.
பணிவழங்கும் நிறுவனங்கள் வீடியோ கான்ஃபெரன்சிங் முறையில் மாணவர்களை எளிதில் அணுகும் வகையில் வளாக வேலைவாய்ப்பு நடவடிக்கைகளை 2021ஆம் ஆண்டு டிசம்பர் அன்று மேலாண்மைக் கல்வித் துறை தொடங்கியது. இதில் பங்கேற்ற 26 நிறுவனங்களில் 55 விழுக்காடு அளவுக்கு அல்லது 14 நிறுவனங்கள் முதன்முறையாக பணியமர்த்த முன்வந்துள்ளன” எனத் தெரிவித்தார்.
சென்னை ஐஐடி மேலாண்மைக் கல்வித் துறையின் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் (பணியமர்த்தல்) அமித் கூறும்போது, "எம்.பி.ஏ., எம்.எஸ். (ஆய்வு) மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு நடவடிக்கைகளை மேலாண்மைக் கல்வித்துறை நடப்பு பருவத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
மாணவர்களில் வெவ்வேறு திறமைகளின் அடிப்படையில் 25 நிறுவனங்கள் தேர்வு செய்ததைக் காண முடிந்தது. அதிகளவில் நிறுவனங்கள் பங்கேற்க பாடத்திட்டத்தின் தரம், இங்கு கல்வி பயிலும் மாணவர்களின் திறன் ஆகியவையே காரணம்” எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: ரூ.171.24 கோடி மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டைகள் - முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!