தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு சபாநாயகர் தனபால் தலைமையில், மார்ச் 8 அன்று தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று ஊரக உள்ளாட்சியின் வளர்ச்சி சிறப்புத் திட்டங்கள் தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின் போது பேசிய திமுக கொறடா சக்கரபாணி, “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் மக்களுக்கு உரிய முறையில் பணம் வழங்கப்படுவதில்லை” என குற்றம் சாட்டினார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் எஸ்.பி வேலுமணி, ”100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மக்களுக்கு உரிய முறையில் அவர்களது வங்கி கணக்கில் பணம் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதில் மாநில அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. மத்திய அரசு தான் இத்திட்டத்திற்கான பணத்தைப் பயனாளிகளுக்கு வழங்கி வருகிறது” என கூறினார்.
அப்போது குறுக்கிட்ட சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் துரைமுருகன்,”ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்களுக்கு வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறுகிறார். இந்தத் திட்டத்திற்கு பெரும்பாலும் வயதானவர்களும், கிராமத்தைச் சேர்ந்த ஏழை எளிய அன்றாடங்காச்சிகளும் தான் செல்கிறார்கள். அவர்களுக்கு பணத்தை வங்கியில் போட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்..? நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும்போது வங்கிக்குச் சென்று அதை எடுப்பதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்” என்றார்.
இதற்கு பதிலளித்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “கிராமப் புறங்களில் வறுமைக்கு எதிரான திட்டப்பணிகளை மேற்கொள்வதே இதன் முக்கிய அடிப்படை நோக்காகும். இந்தக் கேள்வியை நாடாளுமன்றத்தில் கேட்டால் தான் பதில் கிடைக்கும். அதனை இங்கு பேசினால் ஒரு பயனும் இல்லை. 38 பேர் தேர்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இதனை ஏன் நீங்கள் இங்கு பேசுகிறீர்கள். இங்கு பேசிப் பயனில்லை.
அது உங்களின் உரிமை அல்லவா..? 100 நாள் வேலைத்திட்டத்தில், நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுவதை எதிர்த்து திமுக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். அவ்வாறு திமுகவின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால் அதை அரசு செயல்படுத்தும்”என்றார்.
இதனையடுத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் துரைமுருகன், ”அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 37 பேர் இருந்த போது நாடாளுமன்றத்தில் என்ன செய்தீர்கள் ? “ எனகேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ”தற்போது திமுகவிற்கு 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் நாடாளுமன்றத்தில் உரிய முறையில் வாதாடி தமிழகத்திற்கு தேவையானவற்றை பெற்றுத்தருவது அவர்களின் கடமை” என்றும் கூறினார்.
இதையும் படிங்க : கொரோனா பீதி: 'தேவையற்ற வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டும்' - அமைச்சர் விஜயபாஸ்கர்