சென்னை மேற்கு தாம்பரம் குளக்கரை 2ஆவது தெருவைச் சேர்ந்த கவிதா என்பவரின் மகன் மெளனிக் (10). இவர் கக்கன் தெருவில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை (ஜன.28) அம்பாள் நகரில் உள்ள சிறுவர் பூங்காவிற்கு மௌனிக் விளையாட சென்றான்.
ஆனால் பூங்கா பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அதன் அருகில் இருந்த ரேஷன் கடையின் நுழைவுவாயில் கிரில் கேட்டின் உடைந்த பகுதி வழியே நுழைந்து பூங்கா சுற்றுச்சுவர் மீது ஏறி உள்ளே குதிக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மெளனிக் அணிந்திருந்த சட்டையின் காலர் பகுதி சுற்றுச்சுவரில் இருந்த இரும்புக் கிரில் கம்பியில் சிக்கி அவரது கழுத்தை நெரித்தது. இதில் சிறுவன் மயக்க நிலையை அடைந்து கம்பியில் தொங்கிய நிலையில் இருந்தான்.
இதையடுத்து, சிறுவனை தேடி வந்த உறவினர்கள் பூங்காவின் கிரில்கம்பியில் சிறுவன் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு பழைய பெருங்களத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் மெளனிக் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த தாம்பரம் காவல்துறையினர் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். பூங்காவில் மேற்பார்வையாளர்கள் யாருமில்லாததாலும், தாம்பரம் நகராட்சியின் அலட்சியத்தாலும் சிறுவன் உயிரிழந்திருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க:சீர்காழி இரட்டை கொலை வழக்கு: குற்றவாளிக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!