சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110 -ன் கீழ் தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களில் சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் உள்ள முன்மாதிரியாக விளங்கும் சிற்றூர்களுக்கு வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்த ஊக்கத்தொகையாக அரசு சார்பில் ரூ.10 இலட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.
இதனை செயல்படுத்தும் விதமாகச் சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் உள்ள சிற்றூர்களுக்கு மாவட்டத்திற்கு 3 ஊர்களுக்கு ரூ. 10 லட்சம் வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "முன் மாதிரியாக உள்ள சிற்றூர்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் உதவி இயக்குநரை அணுகிச் சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் உள்ள கிராமங்களின் விவரங்களைப் பெற்றுத் தொகுக்க வேண்டும்.
சமத்துவ மயானம்
அதன்படி, தொகுக்கப்பட்ட கிராமங்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட வருவாய்க் கோட்டாட்சியர் சரிபார்த்த பிறகு, மாவட்ட ஆட்சித் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். அதனடிப்படையில் சமத்துவ மயானம் பயன்பாட்டில் உள்ள கிராமங்களுக்கு மட்டுமே இந்த தொகை வழங்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தில் சென்னை தவிர்த்து மாவட்டத்திற்கு மூன்று கிராமங்கள் வீதம் 37 மாவட்டங்களிலுள்ள 111 கிராமங்களுக்கு ரூ. 10 லட்சம் வீதம் மொத்தம் ரூபாய் 11 கோடியே 10 லட்சம் பரிசுத்தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிட்டுள்ளது.
இதையும் படிங்க: cylinder blast: விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த கே.என்.நேரு