செங்கல்பட்டு: கிழக்கு தாம்பரம் கணபதிபுரம் சர்மா தெருவில் வசிக்கும் மளிகைக் கடை உரிமையாளர் சங்கர பாண்டி என்பவர் நேற்று (அக்.16) வழக்கம்போல கடையைத் திறந்தபோது, கடைக்குள் தீப்பிடித்து மளமளவென எரிந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால், கடையிலிருந்த ரூ.1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பொருட்கள் தீக்கிரையாகிய நிலையில், அக்கம்பக்கத்தினர் இணைந்து எஞ்சிய தீயை அணைத்தனர். இதே வேளையில், அப்பகுதியை சேர்ந்த தேவேந்திரன், ஆறுமுகம் என்போரின் இருசக்கர வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், காவல் உதவி ஆணையர் முருகேசன் தலைமையில் அப்பகுதிக்கு சென்ற போலீசார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவிகளை ஆராயந்ததில், மளிகை கடை, இரண்டு இரு சக்கர வாகனங்களை எரித்துவிட்டு எவ்விதமான பதட்டமும் இன்றி ஒருவர் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து இவைகளை எரித்தது, எம்.இ.எஸ்.ரோடு இரண்டாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த முருகவேல்(26) என்பவது தெரியவந்தது. அதன்பின் அவரை சேலையூர் போலீசார் கைது செய்தனர்.
தேவேந்திரன் வீட்டருகே முருகவேல் குடித்துவிட்டு அடிக்கடி அசிங்கமாக பேசிக் கொண்டிருந்ததால் அவரை தேவேந்திரன் கண்டித்ததாகவும் அந்த ஆத்திரத்தில் வாகனங்களுக்கு அவர் தீ வைத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட முருகவேலை தாம்பரம் கோர்ட்டில் ஆஜர் செய்து இன்று (அக்.17) சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் 2 போலீசாருக்கு பாட்டில் குத்து... 20 நாட்களில் 5 முறை போலீசார் மீது தாக்குதல்...