செங்கல்பட்டு: மதுராந்தகம் ஒன்றியத்திற்குள்பட்ட பாக்கம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதி அண்ணா (51). இவர் பிறவியிலேயே சிறிதளவு பார்வை குறைபாடுடன் பிறந்தவர். பின்னர் நாளடைவில் இவரது பார்க்கும் திறன் சிறிது சிறிதாகப் பறிபோனதால் முற்றிலும் பார்வையை இழந்தார்.
மனம் தளராமல் சட்டம் பயின்ற இவர், படிக்கும் காலத்திலேயே கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களில் ஈடுபாடு கொண்டவராக விளங்கியுள்ளார். இவர் மதுராந்தகம் வட்டம் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
தற்போது கண்பார்வை இழப்புக்கு பின்னர் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநில செயலாளராகவும் பாரதி பதவி வகித்து வருகிறார். தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது பாரதி அண்ணாவை செங்கல்பட்டு மாவட்ட செயலாளராகப் பதவி வழங்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கௌரவித்துள்ளது. பார்வை மாற்று திறனாளி ஒருவருக்கு மாவட்ட செயலாளர் பதவி அளிக்கப்பட்டிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடக்குமா? - உயர் நீதிமன்றக்கிளையில் தாக்கலான புதிய மனு!