செங்கல்பட்டு: தாம்பரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் நீர்வள ஆதாரத்துறையினர், தாம்பரம் மாநகராட்சி பொறியியல் துறையினருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு எம்.பி., ’முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடிப் பார்வையிலுள்ள நீர்வள ஆதாரத்துறையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளனர். அவற்றை குறிப்பாக வெள்ளத் தடுப்புப் பணிகள் நீண்டகால பணி, குறுகிய கால வெள்ளத் தடுப்பு என இரு பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர்.
இதன் ஒருபகுதியாக தாம்பரம் அடுத்த வரதராஜபுரம், அஷ்டலட்சுமி நகர், டி.டி.கே நகர், இரும்புலியூர், பிடிசி குடியிப்பு, அருள் நகர், கிருஷ்ணா நகர், செம்பாக்கம் திருமலை நகர், வள்ளல்யூசுப் நகர் ஆகியப் பகுதிகளில் பணிகள் நடைபெறுகிறது.
ஆனாலும் கன மழையின்போது, 15 ஆயிரம் கன அடி மழைநீர் வரும் நிலையில், அதில் 11ஆயிரம் கன அடி நீரை வெளியேற்ற முடியும் என்ற நிலையுள்ளது. இந்நிலையில், மேலும் 4 ஆயிரம் கன அடி நீர் செல்ல ஏதுவாக 20 மீட்டர் அடையாறு ஆற்றை அகலப்படுத்த வேண்டும். அதுபோல, நீர்நிலைகளில் 870 வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளன.
அதனை முறையாக மாற்று இடம் கொடுத்து அகற்றிட வேண்டும். ஏற்கெனவே, முதலமைச்சர் உத்தரவிட்ட பணிகளில் 70% நிறைவடைந்த நிலையில், மேலும் 30% பணிகள் விரைந்து முடித்திட வேண்டும். அப்போதுதான், முழு அளவில் வெள்ள தடுப்புப் பணிகள் நிறைவு பெறும். அதற்கு தடையாகவுள்ளவைகள் குறித்து அலுவலர்களிடம் மனுவாகப் பெற்று முதலமைச்சரிடம் அளிக்கவுள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா