செங்கல்பட்டு: திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் இன்று தனது வேட்பு மனுவை தேர்தல் அலுவலகர் சுப்ரமணியனிடம் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தொகுதியில் உள்ள பிரச்னைகளில் முக்கியமாக அங்கம் வகிக்கும் தாலுகா அளவிலான மருத்துவமனை, மாமல்லபுரம் பேருந்து நிலையம் குடியிருப்பு பகுதிக்கு தேவையான வசதி அனைத்தையும் நான் வெற்றி பெற்ற பின்பு செய்துகொடுப்பேன் என்றார்.
தொடர்ந்து வேட்பு மனுவைத் தாக்கல் செய்த அமமுக வேட்பாளர் கோதண்டபாணி, "கூடிய விரைவில் தமிழ்நாடு முதலமைச்சராக டிடிவி தினகரன் ஆட்சியில் அமர்வார். ஏற்கனவே 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்போரூர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றினேன். பின்னர், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டேன். அதனால், மக்கள் பணியை தொடர முடியவில்லை. தற்போது, டிடிவி தினகரன் தனக்கு ஒரு வாய்ப்பு அளித்து இருக்கிறார். இதில், பெருவாரியான வாக்குகளைப்பெற்று மக்கள் பணியாற்ற ஆர்வமுடன் உள்ளேன்" என்றார்.
இதைத்தொடர்ந்து வேட்புமனுவைத் தாக்கல் செய்த விசிக வேட்பாளர் எஸ்.எஸ். பாலாஜி, "தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலமையிலான கூட்டணி ஒரு மெகா கூட்டணியாக அமைந்திருக்கிறது. வெற்றி பெற்ற பின்பு தொகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்துதருவேன்" என்றார். அவருடன் திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இதய வர்மன், ஆலந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பரசன் ஆகியோர் இருந்தனர்.
இதையும் படிங்க: எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய வானதி சீனிவாசன்