செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது தாய் சந்திரா(72) கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி கோவிலுக்கு சென்று வருவதாக சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தனது தாயை காணாததால் அவரது மகன் வடிவேல் அதிர்ச்சியடைந்தார்.
இதனிடையே கூடுவாஞ்சேரி தாம்பரம் ரயில்வே மார்க்கத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்து கிடப்பது வடிவேலுக்கு தெரிய வந்தது. விபத்தில் உயிரிழந்தது தனது தாய் தான் என்று நம்பிய வடிவேலு, இறந்திருந்தவரின் உருவம் தனது தாயின் உருவத்தோடு ஏறத்தாழ ஒத்துப் போனதால், தனது தாய் என நினைத்து அந்த மூதாட்டி உடலை பெற்று வந்தார்.
அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டு, சடங்கு சம்பிரதாயங்களோடு அந்த உடல் புதைக்கப்பட்டது. மூதாட்டி புதைக்கப்பட்ட மறுநாள், சாவகாசமாக தனது தாய் வீட்டிற்கு வந்ததை கண்டு வடிவேலும் அவரது உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
தனது தாய் நினைத்து வேறு யாரையோ தான் கொண்டு வந்து புதைத்து விட்டது அப்போதுதான் வடிவேலுக்கு தெரிந்தது. பதறிப் போன அவர் தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தார்.
வண்டலூர் தாசில்தார் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்ட அந்த மூதாட்டியின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
விசாரணையில் உயிரிழந்த மூதாட்டி, சென்னை திரிசூலம் பகுதியைச் சேர்ந்த மாரி என்பவரது மனைவி பத்மா என்று தெரியவந்தது. ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகிய ஆதாரங்கள் அடிப்படையில் இறந்தது பத்மா தான் என்பது உறுதி செய்யப்பட்டது. பத்மாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: "வகுப்பறைகளை "கட்" அடித்து இருக்கிறேன்... வாசிப்பை கைவிட்டதே இல்லை” - பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்