செங்கல்பட்டு : 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணி அபார வெற்றி பெறும் என்று மாநில பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு இன்று (அக்.09) காலை வருகை தந்த பாஜக மாநிலத் தலைவர் முருகன், பங்கரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில், ”மத்திய அரசு கொண்டு வந்த வேளாண்மை சட்டத்திருத்த மசோதாவில், பல நல்ல வழிமுறைகள் விவசாயிகளுக்காக செய்யப்பட்டுள்ளன. அதை விவசாயிகள் பெரிதும் மதிக்கிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஸ்டாலின், மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து நல்ல திட்டங்களையும் குறை கூறுவதா? எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டு குறை மட்டும் கூறுவது நல்லதா?” என்றும் கேள்விகளை எழுப்பினார்.
மேலும், ”ஸ்டாலின் குறை கூறுவதை இனி நிறுத்திக்கொள்ள வேண்டும். 2021 சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி, தேர்தல் சமயத்தில் தான் முடிவாகும். ஆனால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும்” என்றார்.