கரோனா தொற்று அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த, நோய் தடுப்பு மருந்து உற்பத்தி வளாகத்தை மாநில அரசிற்கு ஒன்றிய அரசு குத்தகைக்குத் தந்தால் உற்பத்தியை உடனடியாகத் தொடங்கி, மக்களின் உயிரைக் காப்பாற்றும் நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய அரசின் தலைமை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் தலைவர்கள் கூறுகையில், "தமிழ்நாடு அரசு செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தடுப்பூசி உற்பத்தி வளாகத்தை ஒன்றிய அரசிடமிருந்து குத்தகைக்குப் பெற்று, தடுப்பூசி தயாரிப்பதாக கூறியதை பாராட்டுகிறோம்.
ஆனால், தகுதிவாய்ந்த தனியார் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து உற்பத்தியைத் தொடங்கும் என்று கூறப்பட்டது எங்களுக்கு கவலை தருகிறது. தனியார் - அரசு கூட்டு என்கிற போது கட்டணமில்லாமல் அனைவருக்கும் தடுப்பூசி என்பது சாத்தியமாகுமா? என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.
ஒன்றிய அரசிடமிருந்து குத்தகை மூலமாகவோ வேறு எந்த வகையிலோ செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தடுப்பூசி உற்பத்தி வளாகத்தைத் தமிழ்நாடு அரசு பெற்று, தனியாருடன் கூட்டு என்பதைத் தவிர்த்து, மக்களின் உயிர் காக்கும் தடுப்பூசி உற்பத்தியை உடனடியாக, தானே, நேரடியாகத் தொடங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். மக்களின் உயிர் காக்கும் தடுப்பூசி உற்பத்தியைத் தனியாருடன் கூட்டு சேர்ந்துதான் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தை அரசு கைவிட வேண்டும்.
விடியல் தரப் போகிறோம் என்ற முழக்கத்துடன் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும், திராவிட இயக்கத்தின் சமூகநீதிப் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர், செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிக்கும் வளாகத்தை, ஒன்றிய அரசிடமிருந்து பெற்று, நேரடியாகத் தடுப்பூசி உற்பத்தியை உடனடியாக தொடங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.