செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில், கடந்த இரண்டு நாள்களாக அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடந்தது. கவனிப்பாரற்று கிடந்த இந்தச் சடலம் பற்றி, மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் என யாருமே கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களின் கவனத்திற்கு இதனைச் சிலர் கொண்டுவந்தனர். அதனைத் தொடர்ந்து மருத்துவமனை உயர் அலுவலர்களிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேட்டவுடன், பதறியடித்துவந்த ஊழியர்கள், சடலத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மருத்துவமனை நிர்வாகம் சார்பாக செங்கல்பட்டு நகர காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், அருகேயுள்ள அம்மா உணவகத்தில் ஆதரவற்ற பலர் உணவு உட்கொள்வது வழக்கம். அவர்களில் சிலர், மருத்துவமனை வளாகத்தில் படுத்து உறங்குவது வழக்கம் என்று தெரியவந்துள்ளது.
எனவே இறந்த மூதாட்டியும் அவர்களில் ஒருவராக இருக்கலாம் எனவும், அவரைப் பற்றிய தகவல்களை விசாரித்துவருவதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.