செங்கல்பட்டு: செங்கல்பட்டில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் சந்தேகத்தின் பேரில் பிடித்து செல்லப்பட்ட 17 வயது சிறுவன் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி செங்கல்பட்டு ரயில்வே போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருட்டு வழக்கு சம்பந்தமாக 17 வயது சிறுவனை ரயில்வே பாதுகாப்பு போலீசார் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அந்த சிறுவன் செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டதாகவும், இருதினங்கள் கழித்து சிறுவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அந்த சிறுவனை கூர்நோக்கு இல்லத்தைச் சேர்ந்தவர்கள் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இறந்த சிறுவனின் தாய் ப்ரியா என்பவர் சிறுவனை பார்க்க, செங்கல்பட்டு பொது மருத்துவமனைக்கு வரும்போது அவரை கூர்நோக்கு இல்ல அதிகாரிகள் அலைக்கழித்ததாக சிறுவனின் தாயார் தெரிவித்தார். தொடர்ந்து சிறுவனைப் பார்க்க அனுமதிக்காததால், அவர் அழுது ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். பின்னர் சிறுவனின் தாய் ப்ரியாவை, கூர்நோக்கு இல்லத்தைச் சேர்ந்த சிலர் அதே இல்லத்தில் பணிபுரியும் ஒரு பெண்மணியின் அக்காவான சாந்தி என்பவர் வீட்டில் அடைத்து வைத்து, மிரட்டியும் உள்ளனர்.
இதனை அடுத்து தாய் ப்ரியா காவல்துறையினரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்துள்ளார். எனவே சிறுவனின் மரணம் தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டது. தனி நீதிபதி ஒருவரும் விசாரணை செய்தார். விசாரணையில் சிறுவனை கூர்நோக்கு இல்லத்தில் சிலர் கொடூரமாக அடித்து சித்திரவதை செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த மூன்றாம் தேதி சிறுவனின் உடல், அதிகாரிகளின் அழுத்தத்தால் அவசர அவசரமாக தகனம் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சிறுவனின் மரணம் குறித்து விசாரித்த நீதிபதியின் அறிக்கை, உடற்கூராய்வு அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை செய்து, கூர்நோக்கு இல்லக் கண்காணிப்பாளர் மோகன், உதவி கண்காணிப்பாளர் வித்யாசாகர் மேலும் விஜயகுமார், சந்திரபாபு, சரண்ராஜ் அகஸ்டின் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கூர்நோக்கு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனை கொடூரமாக அடித்து தாக்கி கொலை செய்த அதிகாரிகளின் செயல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிறை வார்டன்கள் பணியிடை நீக்கம்