செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் அஞ்சூர் ஊராட்சியில், அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே போடப்பட்ட வேகத்தடை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சரண்ராஜ் என்பவர் தகவல் கோரியுள்ளார். இதற்கு கிடைத்த பதிலில் 4 வேகத்தடைகள் அமைக்க மொத்தம், 1 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வழங்கப்பட்டது. ஊராட்சிக்கான செலவீனங்கள் குறித்த தீர்மானத்திலும் 1 லட்சத்து 55 ஆயிரம் செலவானதாக எழுதி ஊராட்சி மன்றத் தலைவர் கையெழுத்திட்டுள்ளார்.
ஆனால் இதே பணிக்காக தனியார் நிறுவனம் ஒன்றிடமும் சரண்ராஜ் செலவுக்கான கொட்டேஷனை கேட்டுப் பெற்றுள்ளார். அதில் 4 வேகத்தடைக்கும் சேர்த்து மொத்தமாக 15 மீட்டர் நீளத்தில் அமைக்க 27 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும் என கொட்டேஷன் வழங்கியுள்ளனர்.
இதனை ஆதாரமாக கூறும் சரண்ராஜ் வேகத்தடை அமைப்பதில் 1 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அஞ்சூர் ஊராட்சி மன்றத்தலைவராக அதிமுகவைச் சார்ந்த செல்வி உள்ளார். இவர் மீது சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சரண்ராஜ், செல்வி மீது நடவடிகக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஊராட்சி மன்றத்தில் குறிப்பிடுவதுபோல் ஊழல் நடைபெற்றிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்து அல்லாதோர் பழனி கோயிலுக்குள் நுழையத் தடை; மீண்டும் வைக்கப்பட்ட அறிவிப்பு பதாகையால் சர்ச்சை!
மேலும், இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு செல்வியை நேரில் அழைத்துத் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் சரண்ராஜ் வலியுறுத்தியுள்ளார். இந்த புகார் குறித்து ஊராட்சி மன்றத்தலைவி செல்வியின் தரப்பை தொடர்பு கொள்ள முயன்ற போது பதில் கிடைக்கவில்லை, அவர்களின் பதிலையும் வெளியிட ஈடிவி பாரத் தயாராக உள்ளது.
இதையும் படிங்க: "இன்சூரன்ஸ் முதிர்ச்சி.. உடனே பணம் செலுத்துங்கள்" என பல லட்சம் மோசடி: பலே கில்லாடி சிக்கியது எப்படி?