செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த மதனந்தபுரம் பகுதியில் சுமுக வினாயகர் கோயில் அமைந்துள்ளது. இங்கு, இன்று காலை வழக்கம்போல் கோயிலுக்கு வந்த நிர்வாகி பாலு, கோயிலின் கருவறை கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்து 12 ஆயிரம் ரூபாய் திருடுபோனது தெரியவந்தது. இதையடுத்து பீர்க்கன்காரணை காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கபட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்தவந்த காவல் துறையினர் கோயில் வளாகத்தில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வுசெய்தனர், அதில், ஆட்டோவில் வரும் அடையாளம் தெரியாத நபர்கள் கடப்பாரையால் கோயில் பூட்டை உடைக்கும் காட்சி பதிவாகியிருந்தது.
மேலும், கண்காணிப்புக் கேமரா இருப்பதை அறிந்த கொள்ளையர்கள் முகத்தை துணியால் மூடிக்கொண்டு கேமராவை உடைக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அடையாளம் தெரியாத நபர்களைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: சாமி நகைகளைத் திருடிய ஆசாமி: காட்டிக்கொடுத்த 3ஆம் கண்!