செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் உள்ள புகழ்பெற்ற ஆதிபராசக்தி சித்தர் பீட நிர்வாகத்தின் கீழ் பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.
அரசு நிலம், நீர் நிலைப் பகுதிகள் போன்றவற்றில் சித்தர் பீட அறக்கட்டளையின் சில நிறுவனங்கள் செயல்படுவதாகப் புகார் எழுந்தது. இதனிடையே சோத்துப்பாக்கம் பகுதியைச்சேர்ந்த ராஜா என்ற தனிநபர், நீர்நிலைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
2018ஆம் ஆண்டு அப்போதைய ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த பொன்னையாவிடம், இந்த வழக்கின் உண்மைத் தன்மையை பற்றி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. உயர் நீதிமன்றத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகப் பதிலளித்த மாவட்ட ஆட்சியர், சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாக குழப்பமான பதில் அளித்திருந்தார். அதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட ராஜா என்பவர், மேல்முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இருந்தாலும் சில பல காரணங்களால் உயர் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாமல் இருந்தது. இதனையடுத்து தாக்கல் செய்யப்பட்ட முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜூன் 10ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தற்போதைய செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இதனையொட்டி, இன்று ஜூன் 10ஆம் தேதி காலை காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் மேல்மருவத்தூரில் குவிந்தனர்.
சித்தர் பீட நிர்வாகத்தின்கீழ் செயல்படும் திருமண மண்டபத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை, தாங்களே அகற்றித் தருவதாக சித்தர் பீட நிர்வாகம் கூறி அதன்படி சிறிய அளவில் பணிகளைத் தொடங்கினர். மேல்மருவத்தூர் ஏரிக் கரையை ஒட்டி ஆக்கிரமித்துக்குடியிருக்கும் ஏறத்தாழ 20 வீடுகளை அகற்ற வருவாய்த்துறையினர் இன்று (ஜூன் 10) நடவடிக்கை மேற்கொள்ள முயற்சித்தனர்.
ஆனால், அங்கு குடியிருப்போர், தாங்களே தங்கள் வீடுகளை காலி செய்ய சிறிது நாள்கள் அவகாசம் வேண்டும் என்று கேட்டதால் வருவாய்த்துறையினர், காவல் துறையினர் திரும்பிச்சென்றனர்.
இதையும் படிங்க: பாலியல் தொல்லை வழக்கு: பெண் ஐபிஎஸ் அலுவலரிடம் 12ஆவது முறையாக குறுக்கு விசாரணை