செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இடைக்கழிநாடு பேரூராட்சியின் அதிமுக முன்னாள் துணைத் தலைவராக இருந்தவர் அரசு என்கிற ராமச்சந்திரன். இவர் கடந்த 19ஆம் தேதி அடையாளம் தெரியாத கூலிப்படையினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இவரது உடல் உடற்கூறாய்வு முடிந்து மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று (செப்.21) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இக்கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மறுத்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுவந்தனர்.
பின்னர் அவர்களிடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் அதே பகுதியைச் சேர்ந்த செங்குட்டுவன், கணபதி, மாரிமுத்து ஆகியோரை கைது செய்தனர்.
ஆனால் காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாததைக் கண்டித்து மீண்டும் சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர் தகவலறிந்து வந்த மாவட்ட காவல்துறை தலைவர் கண்ணன், குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தினால், கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதித்தது.
இதையும் படிங்க:முன்னாள் அதிமுக நகர் மன்றத் தலைவர் மீது கொலைவெறித் தாக்குதல்!