செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் பகுதியில் வழி தவறிய மூதாட்டியை மீட்டு, உறவினர்களிடம் ஒப்படைத்த காவலர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
வல்லம் கிராம மக்கள், மூதாட்டி ஒருவர் வழி தவறி வந்து அவதிப்படுவதாக செங்கல்பட்டு தனிப்பிரிவு காவலர் தமிழ்வாணனுக்குத் தகவல் அளித்துள்ளனர்.
அதனையடுத்து அங்கு விரைந்து சென்ற காவலர் தமிழ்வாணன், அந்த மூதாட்டியிடம் விவரங்களைக் கேட்டுள்ளார். சரஸ்வதி என்ற தன் பெயரைத் தவிர, அந்த 80 வயது மூதாட்டி எந்தத் தகவலையும் அளிக்க முடியாமல் தடுமாறினார்.
மூதாட்டி என்பதால் மறதியாலும், தடுமாற்றத்தாலும் சரியான பதிலை கூறமுடியாமல் தவித்துள்ளார். பின்னர் அவரை பாதுகாப்பாக அழைத்து வந்த தமிழ்வாணன், தனது துறையைச் சேர்ந்த சக காவலர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் மூதாட்டியைப் பற்றிய தகவல்களை அனுப்பி விசாரிக்கக் கோரினார்.
தனிப்பிரிவு காவலர் ரமேஷ்குமாருக்கு மூதாட்டியைப் பற்றிய விவரங்களை ஒருவர் கூறினார். அதனையடுத்து, சென்னை கிழக்குத் தாம்பரத்தில் இருந்த அந்த மூதாட்டியின் உறவினர்களுக்குத் தகவல் அனுப்பி வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். மூதாட்டியை பாதுகாப்பாக மீட்டு, துரிதமாகச் செயல்பட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த காவலர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
இதையும் படிங்க: சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட 4 பேருக்கு எதிரான அவதூறு வழக்குகள் ரத்து