செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் ஒன்றிய வெங்கம்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருபவர் விவசாயி கணேசன். இவரது 11 வயது மகள் அதே பகுதியிலுள்ள பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று (ஜூன் 29) மாலை தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள இன்டர்நெட் சென்டருக்கு மின்சார கட்டணம் செலுத்துவதற்காக சிறுமி சென்றுள்ளார். மின்சார கட்டணத்தை செலுத்திவிட்டு பின்னர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
சடலமாக கிடந்த சிறுமி:
இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர்களும் உறவினர்களும் சிறுமியை பல இடங்களில் தேடினர். அவர் எங்கும் கிடைக்காததால் சட்ராஸ் காவல் நிலையத்தில் சிறுமி காணாமல் போனதாக அவரது தந்தை புகார் அளித்தார்.
நேற்று மாலை முதல் காவல் துறையினர் சிறுமியை தேடி வந்த நிலையில் இன்று (ஜூன் 30) காலை கணேசனின் வீட்டிற்குப் பின்புறமுள்ள முட்புதரில் உடலில் காயங்களோடு சிறுமி சடலமாக கிடந்துள்ளார்
காவல் துறை விசாரணை:
இதனைக் கண்டு அதிர்சியடைந்த சிறுமியின் தந்தை, அவரது உறவினர்கள் இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பணத்துக்காக 14 வயது சிறுமியை தந்தையே விற்ற அவலம்!