செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ளது தண்டலம் கிராமம். மதுராந்தகத்திலிருந்து எல்.எண்டத்துார் செல்லும் வழியில் சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இக்கிராமம். இங்கு உள்ள பனங்கால் ஓடை எல்.எண்டத்துார், மதுராந்தகம் சாலையின் குறுக்கே செல்கிறது. ஓடை இருக்குமிடத்தில், சாலையில் தடுப்புச் சுவர் கிடையாது. இதனால், மழைக்காலங்களில் ஓடையில் நீர் நிரம்பியுள்ளபோது இரவு நேரங்கள், அதிகாலையில் இவ்வழியே இருசக்கர வாகனத்தில் செல்லும் பலர் ஓடையில் விழுந்து காயமடைந்துள்ளனர்.
இரண்டு நாட்கள் முன்னதாக, அதிகாலையில் இவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த, ஒரத்துாரைச் சேர்ந்த அன்பரசு என்ற இளைஞர் நிலைத்தடுமாறி இந்த ஓடைப் பள்ள நீரில் விழுந்து உயிரிழந்தார். இதுபோன்றதொரு மற்றொரு உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க ஓடையை கடந்துச் செல்ல பாலம் கட்டித்தரவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதனிடையே, இந்த இடத்தை மதுராந்தகம் சட்டப்பேரவை உறுப்பினர் நெல்லிக்குப்பம் புகழேந்தி பார்வையிட்டார். அவரிடம் கோரிக்கை மனு அளித்த கிராம மக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தனர். மாவட்ட ஆட்சியரை சந்தித்து விரையில் நடவடிக்கை எடுப்பதாக புகழேந்தி கிராம மக்களிடம் தெரிவித்தார்.
இதையும் படிங்க:மழை வெள்ளத்தால் ஆமை வேகத்தில் நகரும் வாகனங்கள்!