செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த பழையனுார் சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் விவேக்(27). இவர் மாமண்டூரில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், இவருடைய தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகக் கூறப்படுகிறது.
ஆன்லைன் கடன்
தந்தையின் மருத்துவச் செலவிற்காக, வேறு வழியில்லாமல் ஆன்லைன் செயலி மூலமாக 4 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இந்தக் கடனை திருப்பிச் செலுத்த விவேக்கிற்கு காலதாமதம் ஆகியுள்ளது.
இதைத்தொடர்ந்து கடன் கொடுத்த ஆன்லைன் செயலி நிறுவனம், தனது நிறுவன ஆட்களை வைத்து பல வகையில் தொடர்ந்து விவேக்கிற்கு நெருக்கடி கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.
விபரீத முடிவு
விவேக் கடன் பெற்று ஏமாற்றுவதாக, அவருடைய நண்பர்கள், உறவினர்கள் போன்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவித்து அவமானப்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து பலரும் விவேக்கை தொடர்பு கொண்டு, கடன் தொடர்பாக விசாரிக்க, அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.
கடன் ரீதியான பிரச்னையால் தொடர் மன உளைச்சலில் இருந்துவந்த விவேக், தனது வீட்டின் அருகிலுள்ள கிணற்றில் குதித்து, நேற்று(டிச.21) தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆன்லைன் மூலம் கடன் வாங்கியதைத் திருப்பி கொடுக்க முடியாமலும், கடன் வழங்கிய நிறுவனம் தொடர்ந்து அவமானப்படுத்தியதாலும் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மதுராந்தகம் சுற்று வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.