செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). இவர் பெருங்களத்தூரில் உள்ள அவரது நண்பர்களுடன் கேக் வெட்டி புத்தாண்டு விழாவை கொண்டாடுவதற்காக வந்துள்ளார்.
அப்போது அவர் பெருங்களத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுக்கடையில் மது வாங்கிக்கொண்டு வெளியே வந்தபோது 15 வயது சிறுவனுக்கும் இவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. பேசிக்கொண்டு இருக்கும்போதே அந்தச் சிறுவனை ரமேஷ் அடித்துள்ளார். உடனடியாக அந்தச் சிறுவன் இது குறித்து தனது நண்பர்களுக்குத் தகவல் தெரிவித்தான்.
பின்னர் பேருந்து நிலையத்தில் ரமேஷ் நின்றுகொண்டிருக்கும்போது சிறுவனின் நண்பர்கள் மூன்று பேர் அரிவாளுடன் வந்து ரமேஷின் தலை, கை பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதைப் பார்த்த பொதுமக்கள் இந்தச் சம்பவம் குறித்து பீர்க்கன்கரணை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் விரைந்துவந்த காவல் துறையினர் ரமேஷை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.