செங்கல்பட்டு: மாவட்டம் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயிலில் அரசின் அன்னதான திட்டத்தின்படி தினசரி அன்னதானம் வழங்கப்படுகிறது. அங்கு உணவருந்தச் சென்ற பழங்குடியினத்தவரை அவமதிப்பதாகவும்,அனைவருடன் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கவில்லை என்றும் பழங்குடியின பெண் ஒருவர் புகார் தெரிவித்திருந்தார்.
அந்தப் பெண் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இன்று (அக்.29) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அந்தக் கோயிலில் ஆய்வு செய்தார்.
பின்னர் அங்கு நடைபெற்ற அன்னதானத்தில், அதே பழங்குடியினப் பெண் உள்ளிட்ட பொதுமக்களோடு அமர்ந்து அமைச்சர் சேகர்பாபு உணவருந்தினார். பின்னர் அவர்களுக்கு தீபஒளித் திருநாளையொட்டி வேட்டி சேலைகள் வழங்கினார்.
இது குறித்து அமைச்சர் சேகர்பாபு தனது ட்விட்டரில், "முதலமைச்சர் வழிகாட்டுதல்படி, மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் திருக்கோயிலில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினோம். திருக்கோயில் அன்னதானம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானது. இன்று பொதுமக்களோடு அன்னதான உணவு உட்கொண்டோம்" என குறிப்பிட்டுள்ளார்.
பழங்குடியின பெண்ணுடன் அமர்ந்து உணவருந்திய அமைச்சர் சேகர்பாபுவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நெருங்கும் தீபாவளி - களையிழந்த பட்டாசு வியாபாரம்