செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தை அடுத்துள்ள கிராமம் உத்தமநல்லூர். இங்கு போலி மதுபானம் தயாரிக்கப்படுவதாக அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், ஆய்வாளர் சரவணன், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட காவல் துறையினர், அதிரடியாக உத்தமநல்லூரில் சோதனை நடத்தினர். தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த ராணி என்பவரின் குடும்பத்தில், போலி மதுபானம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து ராணி, அவரது மகள் ரம்யா ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய ரம்யாவின் கணவர் துரை, சகோதரர் கண்ணன் ஆகியோரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். அவர்களிடமிருந்து 52 லிட்டர் எரிசாராயம், மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரம், போலி ஸ்டிக்கர்கள், ஹாலோகிராம் முத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
மேலும், நான்கு லட்ச ரூபாய் ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ராணி, அவரது மகள் ரம்யா இருவரையும், செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் கரோனா பரவல் விகிதம் 12.1% ஆக குறைந்தது!