செங்கல்பட்டு: தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரபல சுற்றுலாத்தலமான மகாபலிபுரம் உள்ளது. உலக அளவில் புகழ் பெற்ற இந்த சுற்றுலா தலத்தில், வருடம் தோறும் இந்திய நாட்டிய விழா நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் முடிவில் தொடங்கி ஜனவரி மாதம் இரண்டாம் வாரம் வரை இந்த விழா நடைபெறும். அந்த வகையில் டிசம்பர் 23ஆம் தேதி இந்திய நாட்டிய விழா மகாபலிபுரத்தில் தொடங்கியது.
இந்த விழாவில், பரதம், கரகம், காவடி, ஒயிலாட்டம் மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, குச்சிப்புடி, கதகளி, பறைஇசை, ராஜஸ்தானி, ஒடிசி உள்ளிட்ட 60 கலைகள் அரங்கேற்றப்படும். இவ்விழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் அன்பரசன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
முதல் நாள் முதல் நிகழ்ச்சியாக சென்னை அரசு இசைக்கல்லூரி மாணவர்களின் நாதஸ்வரம் கச்சேரியும், இரண்டாம் நிகழ்ச்சியாக மதுரை கோவிந்தராஜ் குழுவினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து பிரியதர்ஷினி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் பேசியதாவது, 1992 முதல் மாமல்லபுரம் நாட்டிய விழாவானது இசையும் கலையும், நாடு - இனம் - மொழி கடந்து, மக்களை இணைக்கும் மாபெரும் சக்தியாக நடைபெற்று வருகிறது.
ஒரு நாட்டின் புகழ் அதன் செல்வ வளத்தில் இல்லை, அது அந்த நாட்டின் இசையிலும், கலையிலும் கலந்துள்ளது.
தமிழர்களின் தனித்த அடையாளமே அவர்களின் இசையும் கலையும் தான். அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது மாமல்லபுரம். சமீபத்தில் நடைபெற்ற செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளின் காரணமாக, இன்று உலகமே மாமல்லபுரத்தை திரும்பி பார்க்கின்றது.
மாமல்லபுரத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தவும், தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க பரத நாட்டியம், கிராமிய நடனங்களை அழியாமல் காத்திட வேண்டும் என்ற நல்லநோக்கிலும்,
1992 முதல் 30 ஆண்டுகளாக மாமல்லபுரத்தில் நாட்டிய விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நாட்டிய விழாவைக் காண மாமல்லபுரத்திற்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் அதிக அளவில் ஆண்டு தோறும் வருகின்றனர்.தமிழ்நாட்டிதிற்கும், நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்கும் மாமல்லபுரம் கலை நயமிக்க கற்சிற்பங்களின் கலை நகரம் ஆகும்.
யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக மாமல்லபுரத்தை அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டின் புகழை சர்வதேச அளவில் பரப்பும் விழாவாக இந்த நாட்டிய விழா விளங்கி வருகிறது என்று பேசியுள்ளார்.
இதையும் படிங்க:நம்ம ஸ்கூல் திட்டம்: இபிஎஸ்சின் கேள்விகளுக்கு அன்பில் மகேஷ் விளக்கத்துடன் பதில்!