செங்கல்பட்டு: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கிப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஆதனூரில் தொடங்கும் அடையாறு ஆற்றின் நீரோட்டத்தை, செங்கல்பட்டு மாவட்ட பருவ மழை சிறப்பு அலுவலர் அமுதா ஐஏஎஸ், ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மழைநீர் வடிகால் கால்வாய் பணி
அதனைத்தொடர்ந்து, அடையாறு ஆற்றைச் சுற்றியுள்ள முடிச்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எந்த அளவு மழைநீர் தேங்கி உள்ளது, அடையாறு ஆறு எவ்வாறு தூர்வாரப்பட்டுக் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன, முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள மழைநீர் வடிகால் கால்வாய்ப் பணிகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியகருப்பன் கூறுகையில், 'தமிழ்நாடு அரசு எடுத்த சீரிய முயற்சியால் கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு பாதிப்புப்போல் தற்போது நடைபெறவில்லை.
பருவமழைக்கு முன்னதாகவே செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 9 கோடி ரூபாய் செலவில் கால்வாய்கள், மழைநீர் வடிகால்வாய்கள், அடையாறு ஆற்றின் கரைகளைப் பலப்படுத்தி சீர் செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஆற்றில் செல்லும் நீர் தங்குதடையின்றி செல்வதால், ஆற்றுக்கரையைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
தமிழ்நாட்டில் ரெட் அலெர்ட்
தமிழ்நாட்டில் நாளையும், நாளை மறுநாளும் 'ரெட் அலெர்ட்’ அறிவித்துள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களைத் தங்க வைக்க முகாம்கள் தயார் செய்யப்பட்டு, அனைத்து வசதிகளும் செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ. 50ஆயிரம் இழப்பீடு