செங்கல்பட்டு: மருத்துவக் கல்லூரி கலை அரங்கில் தாலிக்குத் தங்கம், திருமண நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதாஜீவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அப்போது பேசிய அமைச்சர் கீதாஜீவன், “கடந்த அதிமுக ஆட்சியில் 2019ஆம் ஆண்டு நிதி பற்றாக்குறையினால் தாலிக்குத் தங்கம், திருமண நிதி உதவிகள் வழங்குவது நிறுத்தப்பட்டது.
இதனால், மூன்று லட்சத்திற்கும் மேலான புகார் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வந்த நிலையில், அதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு திருமணமான தம்பதிகளுக்குத் தாலிக்குத் தங்கம், திருமண நிதியுதவி ஆகியவற்றை திமுக அரசால் வழங்கப்பட்டுவருகிறது” எனத் தெரிவித்தார்.
நலத்திட்டங்கள் வழங்கல்
இத்திட்டத்தின் மூலம் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 492 திருமணமான தம்பதிகளுக்கு ஒரு கோடியே 26 லட்சம் ரூபாய் நிதியும், ஒரு கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ 94 கிராம் தாலிக்குத் தங்கமும் வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 120 மூன்றாம் பாலினத்தவர்களுக்குக் கரோனா சிறப்பு நிதியாக இரண்டாயிரம் ரூபாய் என மொத்தம் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மேலும், 48 பயனாளிகளுக்குத் தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் ஜி. செல்வம், செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினர் வரலட்சுமி மதுசூதன், திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் சாகிதா பர்வீன், மாவட்ட கோட்டாட்சியர் பிரியா திமுக மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் பயனாளிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று நலத்திட்ட உதவிகள் வழங்கிய காவல் துறை