சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்தவும், இங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு தொற்று பரவுவதைத் தடுக்கும் முயற்சியிலும், அரசு அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையிலிருந்து, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய, காவல் துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து, வண்டலுார், பரனுார், ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களை கடுமையாக சோதனைக்கும் உட்படுத்துகின்றனர்.
இதில், இ-பாஸ் அனுமதி பெற்ற வாகனங்களை மட்டும், பிற மாவட்டங்களுக்குள் அனுமதித்தும், மற்ற வாகனங்களைத் திருப்பியும் அனுப்புகின்றனர். தவிர உரிமம், தலைக்கவசம், முகக் கவசம் இல்லாமல் வரும் இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்கின்றனர். தற்போது வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 22 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்குச் செல்ல மக்கள் ஆயத்த நிலையில் இருக்கிறார்கள். இதனையொட்டி, காவல் துறை அதிகாரிகளுக்கு உரிய ஆவணமின்றி, எந்தவொரு வாகனமும் சுங்கச்சாவடியை கடக்கக்கூடாது என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.