காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அடுத்த ஏபி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 32). இவருக்கு சித்ரா (வயது 28) என்ற மனைவியும் நித்யஸ்ரீ (வயது 5), காவிய ஸ்ரீ (வயது 2) என்ற இரு மகள்களும் உள்ளனர்.
பாலசுப்பிரமணியனின் இரு மகள்களுக்கும் அடுத்த மாதம் காதணி விழா நடைபெற உள்ளதை அடுத்து, குடும்பத்தினர் நான்கு பேரும் நேற்று (டிச.20) புத்தாடைகள் வாங்க சென்னை சென்றுள்ளனர். தொடர்ந்து, சென்னையிலிருந்து தங்களது வீட்டிற்கு அனைவரும் திரும்பியபோது, செங்கல்பட்டு மாவட்டம். மாமண்டூர் அடுத்த பாலாற்றுப்பாலத்தில் வந்துகொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி ஒன்று, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பாலசுப்பிரமணியன், நித்தியஸ்ரீ இருவரின் மீதும் லாரியின் பின்சக்கரம் ஏறியுள்ளது.
இந்த விபத்தில் தந்தையும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சித்ரா, காவிய ஸ்ரீ ஆகிய இருவரும் காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி, அங்கு நிற்காமல் வேகமாகச் சென்ற நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற படாளம் காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த சித்ராவும் அவரது மகளும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பியோடிய லாரி ஓட்டுநரை காவல் துறையினர் தொடர்ந்து தேடிவருகின்றனர். இந்த விபத்தால் மாமண்டூர் பாலாற்று பாலப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க...ஸ்ரீபெரும்புதூர் அருகே வேன்-மினி லாரி மோதி விபத்து: 8 பேர் படுகாயம்