செங்கல்பட்டு: மதுராந்தகத்தில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் அருகே உள்ள கடமலைப்புத்தூர் பகுதியில் ஜெகவரதா ரெட்டியார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அக்கம்பக்கத்தில் வேறு எந்த வீடுகளும் இல்லாமல் சற்று ஒதுக்குப் புறத்தில் உள்ளது.
கடந்த ஜனவரி 12ஆம் தேதி இரவு 8 மணியளவில், இவர் வீட்டினுள் திடீரெனப் புகுந்த எட்டு முகமூடிக் கொள்ளையர்கள், வீட்டில் இருந்த அனைவரின் கை, கால்களைக் கட்டிப் போட்டனர். பின்னர், வீட்டில் இருந்த தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து அச்சிருப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., அரவிந்தன் உத்தரவின்படி, மதுராந்தகம் உட்கோட்ட துணை காவல் காணிப்பாளர் பரத் விசாரணையில் இறங்கினார். மதுராந்தகம் ஆய்வாளர் ருக்மாங்கதன், சூனாம்பேடு ஆய்வாளர் மதியரசு, அச்சிருப்பாக்கம் ஆய்வாளர் இளவரசு ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதே கொள்ளைக் கும்பல், மற்றொரு கொள்ளை சம்பவத்திற்கு திட்டமிட்டுக்கொண்டிருப்பதாக, தனிப்படை காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சேலம், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த எட்டு பேர் அடங்கிய முகமூடிக் கொள்ளையர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
முகமூடி கொள்ளையர்கள் வீடு புகுந்து கொள்ளையடித்துச் சென்றதால், செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும் பதற்றம் நிலவியது. இந்நிலையில், மிகக் குறுகிய நாள்களில் காவல் துறையினர் முகமூடிக் கொள்ளையர்களை கைது செய்தது, மக்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: ஐஸ்கீரிம் சாப்பிட்டுக் கொண்டே நோட்டமிட்ட கூலிங் திருடன் - ஆவடி சிசிடிவி காட்சிகள்